Wednesday, April 25, 2007

பர்தா பெண்ணின் பாதுகாப்பு அடையாமா? அடிமைத்தனத்தின் அ டையாளமா?

எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு தமிழ் நெஞ்சங்களே!
சகோதரர் ஆசிப் மீரானின் "தஸ்லிமா நஸ்ரின்" பற்றிய பதிவில் பின்னூட்டமிட்ட சகோ. சிந்தாநதி அவர்கள், பர்தா குறித்து இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார்கள். அது குறித்து சகோ. சிந்தாநதி அவர்களுக்கு சில விளக்கங்கள் அளித்து நான் பின்னூட்ட மிட்டேன். அதன் கருத்துக்கள் மீது சகோதரன் உண்மை தமிழன் அவர்கள் சில குற்றசாட்டுகளை முன் வைத்தார்கள். இவ்விரண்டையும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
---------------------------------
அன்பு சகோ. சிந்தாநதி அவர்களே!

தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் சுதந்திரம் எவ்வளவு அவசியமோ, அது போலவே கட்டுப்பாடும் மிக அவசியமான ஒன்றாகும் என்பதை முதலில் உங்களின் மேலான கவனத்திற்க்கு அறிய தருகிறேன்.

சுதந்திரம் சாப்பாடு போன்றது மனிதனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆனால் கட்டுப்பாடு மருந்து போன்றது எடுத்துக் கொள்ள சிரமமாக தான் தெரியும். வரையறையில்லாத சுதந்திரத்தால் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடு என்னும் நோயிலிருந்து, பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பெற்றுத் தரும் நிவாரணியாக கட்டுபாடு உள்ளது. ஒரு சமுதாயத்தில் சுதந்திரமும், கட்டுபாடும் சமச்சீராக இருக்குமானால் அந்த சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயமாக திகழும். வரையறையில்லாத சுதந்திரம் ஒழுக்கச் சீர்கேடுகளை கொண்டுவந்து சேர்ப்பது போல, வரையறையில்லாத கட்டுபாடுகள் அடிமை சமூகத்தை, தாழ்வு மனப்பான்மை கொண்ட கீழ் நிலை சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

சகோதரி கமலா சுரையா அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் அளித்த ஒரு பேட்டியிலே குறிப்பிட்டார், "சுதந்திரம் மட்டுமே ஒரு சமூகத்தின் முற்போக்கு சிந்தனையின் அளவுகோலாகவும், நாகரிகத்தின் வளர்ச்சியாகவும் கருதப்படுமேயானால், பகுத்தறிவில்லாத மிருகங்களே இவற்றிக்கு முன்னுதாரங்களாக கருதப்பட வேண்டும். ஏனென்றால் மிருகங்கள் தான் வரையறையில்லாத சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. ஆனால் நான் கட்டுபாடான சுதந்திரத்தையே விரும்புகிறேன்" சிந்தித்து பார்க்க வேண்டிய சிறப்பான வாக்கியங்கள் இல்லையா? சகோ. சிந்தாநதி அவர்களே!

பிறருக்கு காமவுணர்வுகளையும், வக்கிரகரமான எண்ணங்களையும் தூண்டும் வகையில் ஆடை அணியாமல், கண்ணியமாக, பிறர் மனங்களில் சபலங்களை உண்டாக்காத வகையில் உடலுறுப்புக்களை மறைத்து ஆடை அணிந்து கொள்ள சொல்வதே இஸ்லாம் கூறும் பர்தா முறையாகும். இவ்வாறு உடலை மறைத்துக் கொள்ள, எந்த துணியையும் எந்த முறையிலும் எந்த கலரிலும் அவரவரின் வசதிக்கும், சுயவிருப்பத்திற்க்கும் ஏற்ப தேர்வு செய்து கொள்ள இஸ்லாம் சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆக இந்ததந்த பகுதிகள் எல்லாம் மறைக்கப்பட வேண்டும் என்ற கட்டுபாடு, அதே நேரத்தில் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற துணிகளை தேர்வு செய்யும் சுதந்திரம். இப்படி கட்டுபாடான சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது. கருப்புத் துணியால் உடலனைத்தையும் பொதிந்து கொள்ள சொல்லும் அடக்குமுறையான கட்டளையல்ல பர்தா. அவ்வாறு இஸ்லாம் கூறுவதாக நீங்கள் அறிந்திருந்தால், உங்களுக்கு இஸ்லாம் தவறாக எடுத்து காட்டப்பட்டுள்ளது.

எனது விருப்பத்திற்க்கு ஏற்ப எம்முறையிலும் ஆடை அணிவேன் என்று கூறி பிறருக்கு காமவுணர்வை தூண்டுவது அவர்களின் சுதந்திரத்தை பறிப்பது இல்லையா? ஒருவருடைய கட்டுபாடற்ற சுதந்திரம் மற்றவருக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் தரும் போது அது சுதந்திரமாகுமா? சர்வாதிகாரமாகுமா? சிந்தித்து பாருங்கள் சகோ. சிந்தாநதி அவர்களே!

சுயவிருப்பத்திற்க்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்க்கும் எல்லைகள் இருக்க வேண்டும். அந்த எல்லைகள் தான் கட்டுபாடாகும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் சமுதாய கண்ணோடு ஏற்படுத்தபட்டதாகும். தனிமனிதனுக்கு நன்மையும், சமுதாயத்திற்க்கு சீர்கேடும் தரும் வரையறையற்ற சுதந்திரத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சமுதாயத்திற்க்கு நன்மையையும், தனிமனிதனுக்கு கண்ணியத்தையும் கெளரவத்தையும் பெற்று தரும் கட்டுபாடான சுதந்திரத்தை இஸ்லாம் போதிக்கிறது. எனவே இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா பெண்களை அடிமைபடுத்துவதன் அடையாளமல்ல. கண்ணியத்தையும் மாண்பையும் பெண்களுக்கு பெற்றுத் தரும் பாதுகாப்பாகும். நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். தங்களுக்கு இன்னும் இது குறித்த ஐயங்களும் சந்தேகங்ளும் இருந்தால் தாராளமாக எழுப்புங்கள். இறைவன் நாடினால் விளக்கம் தருகிறேன்.

//முஸ்லிம் பெண்கள் மீது பர்தாவை திணிக்கக்கூடாது என்ற தஸ்லிமா 'Let us burn the burqa' என்கிறார். அப்படியென்றால் அணிவதைத் தான் திணிக்கக்கூடாது, அவிழ்ப்பதைத் திணிக்கலாம் என்றல்லவா ஆகிறது.//
சரியான எடுத்துகாட்டு சகோதரி ஷாஹிதா அவாகளே! புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே! இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
-------------------------------------------
சகோதரர் உண்மைத் தமிழனுக்கு தந்த பதிவு
------------------------------------------
அன்பு சகோதரர் உண்மைத் தமிழன் அவர்களே!
எனது பின்னூட்டத்தை தாங்களட பார்வையிட்டதற்கும், அது குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்ததற்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இன்னும் சற்று விரிவாக இது குறித்து தங்களுடன் கருத்து பரிமாற்றம் செய்ய ஆர்வப்படுகிறேன். எனவே இதே பின்னூட்டத்தை பதிவாக எனது வலைப்பூவில் பதிவும் செய்கிறேன்.

1) சகோதரரே! ஆடையணிவதன் அவசியங்கள் என்னவென்றால், முதலில் மானத்தை மறைப்பதற்கும், தட்பவெட்ப சூழ்நிலைகளிலிருந்து உடலை பாதுகாப்பதற்கும், கண்ணியமான தோற்றத்தை தருவதற்குமாகும். இதுவே ஆடையின் அவசியமாக நான் அறிந்திருப்பதாகும். இதில் தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா?

2) உடல் அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று போல் இல்லாததினால், மேலே குறிப்பிட்ட அவசியத்திற்காக ஆடையணியும் போது, ஆணைப் போல தான் பெண்ணும் உடையணிவாள் என்னும் சமத்துவ வாதம், பகுத்தறிவு ஒவ்வாது. எனவே ஆண் அவனது உடலமைப்புக்கு தகுந்த மாதிரியும், பெண் அவளது உடலமைப்புக்கு தகுந்த மாதிரியும் உடையணியதான் வேண்டும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!

3)மேற்கத்திய மோகத்தால் ஏமாற்றப்படும் நமது நாட்டு சகோதரிகளில் சிலர், அரைகுறையாக ஆடையணிந்ததன் விளைவாக நமது பல்கலைக்கழகங்கள், பெண்கள் ஆடை அணிந்து வருவதற்க்கு கட்டுப்பாடுகள் விதித்ததே? அதன் காரணம் என்ன? உடல் பரிமாணத்தின் தோற்றத்தை வெளிகாட்டும் வகையில் அந்த பெண்கள் அணிந்து வந்தது, சமூகசீர்கேட்டிற்கு வித்திடுகிறது என்ற கவலையால் தானே? தாங்கள் கூறுவது போல, மாணவிகள் எப்படி வேண்டுமானாலும் உடையணிந்து வாருங்கள், யாருக்கு பிடிக்கவில்லையோ அவர்கள் கண்களை கட்டிக் கொண்டு வரட்டும் என்றா கூறினார்கள்? ஐயா! பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்னும் தங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் எவை பெண்களுக்கு எதிரானவை, எவை பெண்களுக்கு பாதுகாப்பானவை என்பதை பிறித்தறிந்து அதனடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!

4) நாம் நமது வீட்டு பெண் மக்களை அழைத்துச் செல்லும் போது, பிறர் சற்று கூர்ந்து பார்த்தாலே நமக்கு உள்ளமெல்லாம் பதறுகிறதே, அதே பெண்கள் அருவருப்பான உடையணிந்து வந்தால் எல்லோரின் பார்வையும் இவாகள் மீது தானே படியும், இதை தன்மானமுள்ள நாம் ஜீரணிக்க முடியுமா? அந்நிலையில் அது அவள் சுதந்திரம் என்று எவன் வக்கிரமாக பார்த்தால் எனக்கென்ன என்று இருப்பீர்களா? அல்லது வக்கிரமாக பார்ப்பவனுடன் சண்டையிடுவீர்களா? அல்லது நமது பெண்ணுக்கு அறிவுரை கூறி திருத்துவீர்களா? நமது பெண்ணுக்கு நம் கலாச்சாரத்தின் மேன்மையை கூறி கண்ணியமாக உடையணிய அறிவுரை கூறுவது தான் எனது கருத்தாகும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!

5)ஆண், பெண்கள் வரையறையின்றி பழகுவது மேற்கத்திய கலாச்சாரம். அதனால் தான் கல்யாணத்துக்கு முன்பே கற்பமாகும் நிலை அங்கு மிக சகஜமானதாகும். கற்பின் மாண்பு என்ன என்பதை அறியாத அவல நிலையில் இருக்கிறார்களே அதன் காரணம் ஆண் பெண் வரையறையின்றி பழகுவததால் தானே? இன்று நமது மக்களும் அது தான் நாகரீகம், முன்னேற்றத்தின் அடையாளம், என்று ஏமாறி வருவதால் இன்று மெதுவாக நமது சமுதாயத்திலும் ஒழுக்க சீர்கேடுகள் மலிந்து போய் உள்ளதா? குறைந்து வருகிறதா?அதன் வெளிப்பாடு தானே, இன்று பல விடுதிகளில் இரவு நடனங்கள் நடைபெறும் காமகளியாட்டமாகவும், பல பங்களாக்கள் விபச்சாரத்தின் தொட்டில்களாகவும் மாறியதோடு குஷ்பு போன்ற கழிசடைகள் கூட மிகச் சாதாரணமாக கல்யாணத்திற்கு முன் உடலுறவு வைப்பதில் தவறில்லை என்று கற்பை பற்றி மிகச் சாதரணமாக கருத்து கூறினாள். தொட்டில் குழந்தை திட்டம் தீட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை இன்று நமக்கு உருவானதே? ஏன்? 20-25 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு திட்டத்தை யாரும் யோசித்து பார்த்திருப்பார்களா? மேலை கலாச்சாரத்தில் மோகம் கொண்டதன் விளைவு, ஆண் பெண்கள் வரையறையில்லாமல் பழகும் சூழல் மலிந்ததால் தான் இத்தகைய சீர்கேடுகள் நமது சமூகத்தில் துளிர்விட்டுள்ளன என்பது என் கருத்தாகும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!

6) நீங்கள் கேட்டிருக்கிறீர்களே? பெண்கள் எப்படி வந்தால் என்ன? ஆண்களை கண்களை கட்டி கொள்ள சொல்லி கட்டுபாடு விதிக்க முடியுமா? என்று வினா எழுப்பி ஆணாதிக்க மார்க்கமாக இஸ்லாத்தை தவறாக நினைத்து விட்ட சகோதரா! நீங்கள் சொல்லுவதற்கு 1425 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் அத்தியாயம் 24 வசனம் 30ல் கூறிவிட்டது ஆண் தனது பார்வையை காமத்தின் கோரத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று. "(நபியே!)இறைநம்பிக்கையுடைய ஆண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களை பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிக பரிசுத்தமானதாகும். நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்." பொதுவாக கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே அவசியமானதாக கூறப்படும் வேளையில், ஆண்களுக்கு கற்பின் அவசியத்தை இந்த வசனம் எடுத்துக் கூறுகிறதே. இது தான் ஆணாதிக்கமா?. கற்பின் அவசியத்தை முதலில் ஆண்களுக்கு அறிவுறுத்திவிட்டு (30வது வசனம்)அடுத்து தான் (31வது வசனம்) பெண்களுக்கு கற்பின் அவசியத்தையும், பெண்கள் மறைக்க வேண்டிய உடல் பாகங்கள் என்னென்ன என்பதையும் இந்த வசனம் விளக்குகிறது. "இன்னும் இறைநம்பிக்கையுடைய பெண்களுக்கும் நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளவும். தங்கள் வெட்கத் தலங்களை பேணி பாதுகாத்து கொள்ளவும். தங்கள் அலங்காரத்தில் சாதரணமாக வெளியில் தெரியக் கூடியதை தவிர, வேறு எதையும் வெளியில் காட்ட கூடாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்பு பகுதிகளை மறைத்து கொள்ள வேண்டும்......"
ஆக எங்கே பெண்ணடிமை தனம் இஸ்லாத்தில்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் கற்பை பேணிக் கொள்ள கட்டளையிட்டதில் ஏதேனும் பாராபடசம் காட்டபட்டுள்ளதா? கருப்பு துணியால் ஒட்டு மொத்த உடலை மூடி விட கூறியுள்ளதா? இயல்பாக தெரிய வேண்டிய பகுதிகளை (முகம், முன்கை, பாதம்) பகுதிகளை தவிர தான் மறைக்க சொல்கிறது.

எனவே சகோதரர் உண்மை தமிழன் அவர்களே! உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். இன்னும் தங்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருக்குமானால், தாராளமாக கேளுங்கள். எனது அறிவுக்கு தெரிந்த மட்டில் உங்களுடன் எனக்கு தெரிந்தவைகளை இறைவன் நாடினால் பரிமாறிக் கொள்கிறேன்.
------------------------------------------
அன்பு தமிழ் நெஞ்சங்களே!

எனது கருத்துக்களில் உண்மையிருக்கமானால், புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே. தவறுகள் இருந்தால், அது என் சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அது சரியாக சுட்டிக்காட்டப்பட்டால் என்னை திருத்தி கொள்ளுவேன்.
நன்றியும், வாழ்த்துக்களுடனும்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

6 comments:

Anonymous said...

சகோதரர் அவர்களுக்கு..
உங்கள் மீது இறைச்சாந்தியும் குறையிலா நிம்மதியும் நிலவட்டுமாக!

பர்தா என்பதை சில முஸ்லிம் ஆண்கள்-தாலிபான் போன்றவர்கள்- கடுமையாகவும் தவறாகவும் புரிந்துக்கொள்வதாலேயே, பிறரிடமிருந்து இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன.
ஆக, அவர்களை -அந்த சில முஸ்லிம்களை- சீர்திருத்தவேண்டியதும் நம் முக்கிய கடமையாகிறது.

அதுபோக, இஸ்லாம் மீது எவ்வகையிலேனும் குறை சொல்ல துடிப்பவர்களுக்கு 'சில முஸ்லிம்களின்' இத்தகையச் செயல்கள் உதவுகின்றன. இதிலிருந்து நாம் விளங்கவேண்டியது, முஸ்லிம்களுக்குள்ளும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிகழ்ந்தாகவேண்டிய சீர்திருத்தத்தின் அவசியத்தை!

பொறுமையான நிதானமான அணுகுமுறையே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாயிருக்க... தூண்டப்பட்ட ஈகோவில் தூண்டில் புழுக்களாக முஸ்லிம்கள் சிக்கிக்கொள்வது இன்றைக்கு இணையத்தில் என்றில்லாமல் எங்கும் நடந்து வருகிறது. இதை முஸ்லிம்கள் உணர்ந்தாலே பாதி சூழலை வென்றதாகிவிடும்.

இறைவன் தங்களுக்கு நல்அருள் அளிப்பானாக.

✪சிந்தாநதி said...

நண்பரே

ஒரே ஒரு திருத்தம்.

நான் இஸ்லாம் குறித்த விமர்சனமாக அதை முன்வைக்கவில்லை.

பொதுவாக மதங்கள் பெண்ணுரிமைக்கு எதிரானவை என்பதையே கூற நினைத்தேன்.

நீங்களோ மதங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதான கருத்து கொண்டிருக்கிறீர்கள். முற்றிலும் முரண்பட்ட இரு கருத்துக்களிடையே விவாதம் எந்த பலனையும் தரப்போவதில்லை.

நான் கடவுள் நம்பிக்கையையும் மதநம்பிக்கையையும் வேறுவேறாக பார்க்கிறேன். நீங்கள் இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்கள்.

கடவுளை நம்ப மதகட்டுப்பாடுகள் அவசியமில்லை.அது மனம் சார்ந்த ஒரு நம்பிக்கை மட்டுமே என்பது என்கருத்து.

கட்டுப்பாடு சில தேரங்களில் அவசியம் தான். ஆனால் அவை மதங்களின் கட்டுக்களாக இல்லாமலிருப்பதே சமூகத்துக்கு நல்லது.

உலகில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மதவெறியே காரணமாகிக் கொண்டிருக்கிறது. மதத்தீவிரவாதம் தான் இன்றைய உலக சமாதானத்துக்கு எதிரான முக்கிய பிரச்சினை.

இது எல்லா மதங்களுக்க்கும் பொருந்தும்.

நல்லடியார் said...

சகோதரர் நெய்னா முஹம்மத்,

தங்கள் மதங்கள் கொடுக்க மறுத்த அனைத்து பெண்ணுரிமைகளையும் இஸ்லாம் கொடுக்கச் சொன்னதோடு இதனைச் செயலபடுத்துவது ஆண்களின் கடமை என்றும் வலியுறுத்தியது.

எத்தகைய கூக்குரல்களையும் புன்முறுவலுடன் எதிர்கொண்டே இஸ்லாம் பரவி வருகிறது.

தங்களின் மென்மையான தன்னடக்கமுள்ள கருத்துக்கள் தமிழ் வலைப்பூக்களில் வாசம் வீசட்டும்

Naina said...

எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர்கள் அனானி, சிந்தாநதி, நல்லடியார் ஆகியோர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

புகழனைத்து வல்லான் இறைவன் ஒருவனுக்கே உரித்தானது.
சகோதரர் அனானி அவர்களே! இஸ்லாம் இன்று மக்களிடையே தவறாக காட்டப்படுவதற்க்கு முஸ்லிம்களாகிய நமது பங்களிப்பும் நிச்சயமாக இருக்கிறது. காரணம், நமது செயல்பாடுகள், நடவடிக்கைகள் இஸ்லாமிய கோட்பாடுகளில் படி அமையாமல் இருந்ததால், நமது தவறான செயல்கள் அனைத்தும் இஸ்லாமாக பார்க்கப்பட்டு விட்டது. தங்களது கருத்தில் நான் உடன்படுகிறேன். தங்களது அன்புக்கும் பிராத்தனைக்கும் நன்றி. இறைவன் நேர்வழிகாட்டட்டும்.

சகோ.(தரா? தரி?) சிந்தாநதி அவர்களே! இங்கு நாம் பறிமாற்றம் செய்கின்ற கருத்துக்கள் அனைத்தும் இறுதியில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளபட வேண்டும் என்பதல்ல எனது குறிக்கோளும். நான் பின்பற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளை தகவல்களாக உங்களிடம் பறிமாறி கொள்கிறேன். இஸ்லாத்தின் கொள்கையும் அதுவே. இறைவன் தன் தூதருக்கு செல்கிறான், நபியே! உமது கடமையெல்லாம் மக்களுக்கு எனது தூது செய்தியை அறிவித்து வைப்பது மட்டுமே. எனவே தான், இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை என்று திருமறை பகிரங்கமாக அறிவிக்கிறது. காரணம், இறைவனால் பகுத்தறிவு மனிதனுக்கு வழங்கப்பட்டு, நல்வழி எது? , தீயவழி எது? என்று பிறித்தறிவிக்க பட்ட பிறகு, மனிதன் தன் சுய விருப்படி தனது வழியை தேர்வு செய்து கொள்ளட்டும். எனவே அவன் சுயமாக தேர்வு செய்து கொண்ட வழிமுறைக்கு அவனே பொறுப்புதாறியாகிறான் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு. ஆகவே, நானும் உங்களிடம் வாதம் செய்யவில்லை. தகவல்களை பறிமாறி கொள்கிறேன்.

அன்பு சகோதரர் நல்லடியாரே! தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

அபூ முஹை said...

அன்பின் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பொறுமையான உங்கள் விளக்கங்களுக்கு பாராட்டுக்கள்.

உங்கள் முயற்சியை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

உங்கள் பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்கலாமே!

அன்புடன்,
அபூ முஹை

Naina said...

எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் அபூ முஹை அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது பதிவை தாங்கள் பார்வையிட்டதற்கும், அது குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்ததற்கும், உங்களின் துவாவிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!

பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைப்பது எப்படி? தகவல் தாருங்கள். இறைவன் நாடினால் இணைத்து கொள்கிறேன். எனது தகவல்ளில் குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாற்றமான தகவல் வந்து விட்டால், தயவு செய்து திருத்துங்கள். நீங்கள் எழுதும் நடையும், எடுத்து வைக்கும் வாதங்களும் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தும். புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!
உண்மையை எடுத்து சொல்லும் பணியில், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியில் நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க இறைவன் உதவிசெய்வானாக! என்ற பிராத்தனையோடு முடித்துக் கொள்கிறேன்.
"இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். இறைவனுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக இறைவன் கடுமையாக தண்டிப்பவன். அத்தியாயம் 5, வசனம் 2

நன்றியும் வாழ்த்துக்களுடன்
அன்பு சகோதரன்.
நெய்னா முஹம்மது